Print this page

மலேயா தமிழர்கள். குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.021932 

Rate this item
(0 votes)

மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17-1-32 ல் அகில மலேயாத் தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடை பெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண்டாற்றி வரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை , ஆர்.ஆர். ஐயாறு, தாமோதரம்.ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச்.எச். அப்துல்காதர் முதலானவர்கள் அம்மகாநாட்டில் அதிகமான பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள். அந்த மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக்கின்றன. 

அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங் களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் "அகில மலேயா தமிழர் மகாநாடு” என்பதை "அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு” என்று மாற்ற வேண்டும் என்ப தும் முக்கியமான தீர்மானங்களாகும். இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங்களைச் சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறை யில் செய்ய வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இத்தீர்மானங்களை யெல்லாம் நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். 

தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர்களும் சீர்திருத்த ஆர்வ முடைய தோழர்களும் இவைகளை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார்களென்று நம்புகின்றோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.021932

 
Read 138 times